சமூக வலைதளங்களில் ஒருவரின் உணர்வுபூர்வமான காணொலி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, தான் வேலையை விட்டு நின்ற அடுத்த பத்து முதல் பன்னிரண்டு நாட்களுக்குள், பல ஆண்டுகளாகத் தன்னுடன் இருந்த தொடர்ச்சியான மன அழுத்தம், தலைபாரம் மற்றும் பதட்டம் ஆகியவை முற்றிலும் மறைந்துவிட்டதாகத் தயாள் என்ற அந்தத் திரைப்படத் தயாரிப்பாளர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
பல ஆண்டுகளாகத் தன்னுடைய வேலையின் காரணமாகவே தலைவலியும் அழுத்தமும் இருந்ததாகவும், அதைத் தான் சாதாரணமாக ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நாள் ஒன்றுக்கு இருபது சிகரெட்டுகள் புகைக்கும் பழக்கத்திலிருந்து, வேலையை விட்டு நின்ற பிறகு, எந்த முயற்சியும் இன்றி முழுமையாக விடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது மனமும் அமைதியும் அடைந்தவுடன், சிகரெட் பிடிக்கும் ஆசை தானாகவே மறைந்துவிட்டதாகக் கூறியுள்ளார். வேலைப் பளு காரணமாகத் தெளிவான சிந்தனைக்கு இடமில்லாமல் இருந்ததாகவும், இப்போது எந்தவிதப் பதட்டமும், இறுக்கமும், காலக்கெடுவைப் பற்றிய கவலையும் இல்லாமல் காலையில் கண் விழிப்பதாகவும் அவர் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.
அமைதிக்காகப் பிராணாயாமம், சுவாசப் பயிற்சிகள் போன்ற எந்த உத்திகளும் இல்லாமல், தற்போது மனம் இயற்கையாகவே அமைதியாகவும் மௌனமாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காணொலியின் முடிவில், பணம் முக்கியம் என்றாலும் “மன அமைதி இருந்தால், எல்லாம் இருக்கிறது போல உணர்வு வருகிறது; அமைதி இல்லை என்றால், சம்பளச் சீட்டுகூட அர்த்தமற்றதாகத் தெரிகிறது” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற தொழில் ரீதியான சோர்வு மற்றும் மனச்சோர்வு குறித்த அனுபவங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
