ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் படையப்பா. இந்தப் படம் தற்போது மீண்டும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ரமேஷ் கண்ணா, இந்தப் படம் வெளியானபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு என்ன சொன்னார் என்ற நினைவைப் பகிர்ந்துள்ளார்.

1996ஆம் ஆண்டு நடந்த அரசியல் நிகழ்வுகள் காரணமாக ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதனால், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘நீலாம்பரி’ கதாபாத்திரம் ஜெயலலிதாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக அப்போது ஒரு வதந்தி பரவியது.

இந்த சூழ்நிலையில், படம் வெளியான பிறகு ஜெயலலிதா அவர்கள் படத்தைப் பார்க்க விரும்பினார். அப்போது முதல்வர் கலைஞர் படம் பார்த்திருந்ததால், ஜெயலலிதா பார்க்க எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டு, அவருக்குப் படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்து முடித்த பிறகு ஜெயலலிதா, “நல்லா பண்ணியிருக்காங்க” என்று படத்தைப் பாராட்டியதாக நடிகர் ரமேஷ் கண்ணா இப்போது நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும், படையப்பா படத்தின் கதை, கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும், முதலில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ரஜினி விரும்பியதாகவும் முன்பு ஒரு வீடியோவில் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.