கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி புதிய டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜெய்பீம் நகரைச் சேர்ந்தவர் நந்தீஸ் (25). இதே பகுதியைச் சேர்ந்தவர் சிருஷ்டி (22). ஒரே பகுதியில் வசித்து வந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து, இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதலுக்கு இரு தரப்பின் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், காதல் ஜோடி சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை நந்தீஸ் மற்றும் சிருஷ்டி இருவரும் பத்ராவதி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த இரு தரப்பின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு திரண்டனர். காவல் நிலைய வளாகத்தில் வைத்து போலீஸார் இரு தரப்பினரையும் விசாரித்தனர்.

அப்போது, இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், சிருஷ்டியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. அப்போது, நந்தீசுக்கு ஆதரவாக பேசிய அவரது உறவினர்களான கிரண் (25) மற்றும் மஞ்சுநாத் (65) ஆகிய இருவரை அவர்கள் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலைக் கண்ட போலீஸார் தடுக்க முயன்ற போதும், அதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதில், கிரண் மற்றும் மஞ்சுநாத் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதையடுத்து, போலீஸார் சிருஷ்டியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 5 பேரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.