2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. பல அதிமுக சீனியர்கள் திமுக மற்றும் தவெக போன்ற கட்சிகளுக்கு மாறி வருகின்றனர். இந்தக் குழப்பமான நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசும்போது, மதுரை மாநகராட்சி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தார். “மதுரையில் ₹200 கோடி ஊழல் நடந்துள்ளது.

மக்கள் வரி மேல் வரி விதிக்கப்படுவதால் கஷ்டப்படுகிறார்கள். அடுத்து அதிமுகதான் ஆட்சிக்கு வரும்” என்றும் கூறினார். ஆனால், அப்போது திடீரென, “திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பியாக இருப்பதால் தான், தூத்துக்குடி விமான நிலையம் வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டது” என்று கனிமொழியைப் பாராட்டிப் பேசினார். எதிர்க்கட்சித் தலைவர் ஆளும் கட்சித் தலைவரைப் பாராட்டிப் பேசியது, அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரிய பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.