தனித்துப் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்துக் கேள்விகளை எழுப்பும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று ஜைநகர்-மணிஹாரி ஜானகி விரைவு ரயிலில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் கதிஹார் சந்திப்பில், அனுமதியின்றி ரயிலுக்குள் ஏறிய சில இளைஞர்களால் ஏற்பட்ட மோதல் காரணமாக, ஒரு பெண் பயணி கழிவறைக்குள் பூட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

 

மோதலின் போது, ‘ரயிலில் சண்டை நடக்கிறது. மக்கள் கழிவறை கதவைத் தட்டுகிறார்கள். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது’ என்று அந்தப் பெண் பீதியுடன் மெதுவாகப் பேசும் காணொளியை அவர் கழிவறைக்குள் இருந்து பதிவு செய்தார். இந்த அனுபவம் ‘மிகவும் பயங்கரமானது’ என்று குறிப்பிட்ட அந்தப் பெண், நடந்த சம்பவத்தை விவரித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் காணொளியைப் பகிர்ந்தார்.

‘நான் தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, எனது ரயில் கதிஹார் சந்திப்பில் நின்றது. திடீரென முப்பது முதல் நாற்பது இளைஞர்கள் கூச்சலிட்டபடி, ஒருவரையொருவர் தள்ளியபடி பெட்டிக்குள் நுழைந்தனர். நான் கழிவறையில் இருந்தேன், வெளியே வரக்கூட முடியவில்லை. அதனால், நான் கதவைப் பூட்டிக்கொண்டு ரயில்வே உதவி எண்ணைத் (139) தொடர்பு கொண்டேன்.

அதிர்ஷ்டவசமாக ரயில்வே பாதுகாப்புக் காவலர்கள் வந்து கூட்டத்தைக் கலைத்து, நான் பாதுகாப்பாக எனது இருக்கைக்குத் திரும்ப உதவினார்கள்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் ‘எவ்வளவு முயன்றாலும் பீகாரை திருத்த முடியாது’ என்று கடுமையாகக் கருத்துத் தெரிவித்ததுடன், ‘கலவரக்காரர்கள் கதவுகளை அடைத்து, டி.டி.இ-யுடனும் சண்டையிடுகின்றனர்’ என்றும் குறிப்பிட்டு, மற்ற பயணிகள் சண்டையிடும் காணொளிகளையும் பகிர்ந்துள்ளார்.