புதுச்சேரி மாநிலம், காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பரிதி விமல். இவர் தனது 2 வயது மகளுடன் கடை வீதிக்குச் செல்லும்போது, வழியில் தனது நண்பன் பாலகிருஷ்ணனை பைக்கில் ஏற்றிக்கொண்டார். சிறிது தூரம் சென்றதும், பைக்கில் பெட்ரோல் தீர்ந்து வழியில் நின்றுவிட்டது. அப்போது, பாலகிருஷ்ணன் விமலிடம்,

“மச்சி, நீ போய் பெட்ரோல் வாங்கிட்டு வா. நான் குழந்தையை கடைக்குக் கூட்டிட்டுப் போய் சாக்லேட் வாங்கி கொடுத்து, அழாமல் பார்த்துக்கொள்கிறேன்” என்று நயவஞ்சகமாகப் பேசியுள்ளார். நண்பனின் பேச்சை நம்பிய விமல், குழந்தையை பாலகிருஷ்ணனிடம் விட்டுவிட்டுப் பெட்ரோல் வாங்கச் சென்றுள்ளார்.

பின்னர், மூவரும் சேர்ந்து கடைவீதிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியபோதுதான் குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்க டாலர் காணாமல் போயிருந்ததை விமல் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக நண்பனிடம் கேட்க, அவனோ, “ரோட்டில் எங்காவது விழுந்திருக்குமோ; வா தேடிப் பார்க்கலாம்” என்று கூறி, விமலைத் தேடவிட்டுள்ளான். ஒரு கட்டத்தில் சோர்வடைந்த விமல், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விமலின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோட்டுச்சேரி காவல்துறையினர், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அந்தக் காட்சிகளில், பாலகிருஷ்ணன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க டாலரைக் கழற்றுவது தெளிவாகப் பதிவாகியிருந்தது. உடனடியாக பாலகிருஷ்ணனைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, முதலில் “தன் மீது திருட்டுப் பழி சுமத்தாதீர்கள்” என்று கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

ஆனால், போலீசார் சிசிடிவி காட்சிகளைக் காட்டி, “இது நீதானா? குழந்தையின் தங்கத்தை நீதானே எடுக்கிறாய்?” என்று கேட்டதும், இனியும் தப்ப முடியாது என உணர்ந்த பாலகிருஷ்ணன் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவரிடமிருந்து குழந்தையின் தங்க டாலரை மீட்ட போலீசார், பாலகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

நண்பன் என்று நம்பி குழந்தையை ஒப்படைத்த விமலை, பாலகிருஷ்ணன் ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.