சமூக ஊடகங்களில் பல்வேறு நடன காணொளிகள் வைரலாகும் நிலையில், அனைவரின் மனதிலும் நீங்காத இடம்பிடிக்கும் ஒரு காணொளி தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்திப் பாடல்களுக்கு இந்தியர்கள் மட்டும்தான் சிறப்பாக நடனமாட முடியும் என்ற எண்ணத்தை உடைத்து, அயல்நாட்டுப் பெண்களும் பாலிவுட் பாடல்களுக்கு உற்சாகத்துடன் ஆடுவதைக் காண முடிகிறது.

அந்த வகையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் பிரபலமான பாடலுக்கு ஒரு ஆப்பிரிக்கப் பெண் அசாத்தியத் துடிப்புடன் நடனமாடிய காணொளி, சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவி வருகின்றது. ஒரு அறையில் தொலைக்காட்சியில் தீபிகாவின் பிரபல பாடல் ஒலிக்க, இந்திய உடையணிந்திருக்கும் அந்தப் பெண், தீபிகா படுகோனே திரைப்படத்தில் கொடுத்த அதே முகபாவனைகளுடன் ஆடுகிறார்.

 

சற்றும் தயக்கமின்றி, மிகுந்த நம்பிக்கையுடன் நடனமாடத் தொடங்கும் அவர், பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை தீபிகாவின் அத்தனை அசைவுகளையும் பின்பற்றுகிறார். ‘மீனா கணே’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த அற்புதமான நடனக் காணொளியை இதுவரை நான்கு லட்சத்து தொண்ணூற்று மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

மேலும், 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்து, பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். ‘உங்கள் அசைவுகளும், நீங்கள் காட்சிகளைச் செயல்படுத்திய விதமும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியக் கலாச்சாரத்தின் மீதான உங்கள் ஆர்வம் மிகவும் பிடித்திருக்கிறது’ என்றும், ‘இந்த நடனத்தைப் பார்த்தால் தீபிகா படுகோனே கூடப் பாராட்டுவார்’ என்றும் பலரும் அப்பெண்ணின் திறமையைப் பாராட்டி வருகின்றனர்.