ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்காவில் வசித்துவிட்டு, இந்தியாவில் உள்ள சிறந்த வாழ்க்கைக்காகத் தாயகம் திரும்பிய ஒரு இந்திய வம்சாவளி மென்பொருள் பொறியாளர், பெங்களூருவில் உள்ள நகர வாழ்க்கை “வாழத் தகுதியற்றது” என்றும் “மனிதாபிமானமற்றது” என்றும் குற்றம் சாட்டி, மீண்டும் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல விருப்பதாகச் சமூக வலைதளங்களில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Dear NRIs, think hard before deciding to return to an Indian metro. I did, couldn't tolerate the third-world life, and now leaving India again.
byu/Specialist_File9744 innri
ராகுல் மிஸ்ரா (40) என்ற அந்தப் பயனர், “அமெரிக்காவில் உள்ள என்.ஆர்.ஐ-களே, இந்தியப் பெருநகரத்திற்குத் திரும்பும் முடிவை நன்கு சிந்தியுங்கள். நான் யோசித்தேன், இந்த மூன்றாம் உலக வாழ்க்கையை என்னால் தாங்க முடியவில்லை, அதனால் மீண்டும் இந்தியாவை விட்டு வெளியேறுகிறேன்” என்ற தலைப்பில் அவர் தனது பதிவைப் பகிர்ந்துள்ளார்.
ஆரம்பத்தில், விரைவான ஓய்வு மற்றும் சிறந்த குடும்ப வாழ்க்கைக்காகத் திரும்பி வந்த அவர், நான்கு ஆண்டுகள் இந்த “செயல்பாட்டை இழந்த நகரத்தின் குழப்பங்களால்” அதிகமாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக “இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு” என்றழைக்கப்படும் பெங்களூருவில் தாம் அனுபவித்தப் பிரச்னைகளைப் பட்டியலிட்டுள்ளார்.
இவர், இந்தியப் பெருநகரங்களை “வாழத் தகுதியற்ற நரகக் குழிகள்” என்றும், இவை “சுயமரியாதை மற்றும் கண்ணியத்தை” பறித்துவிடும் என்றும் சாடியுள்ளார். மாசடைந்த காற்று மற்றும் தண்ணீர், சீரற்ற போக்குவரத்து, பாதுகாப்பற்ற சாலைகள், கலப்படம் நிறைந்த உணவு, நடப்பதற்கான இடமின்மை, பெண்களுக்கான பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் குழந்தைகளுக்கான பள்ளி அழுத்தங்கள் ஆகியவற்றை அவர் தனது குறைபாடுகளாகப் பட்டியலிட்டுள்ளார்.
இந்தச் சவால்களைச் சமாளிக்கத் தனது நிதி ஸ்திரத்தன்மை உதவும் என்று நினைத்தேன், ஆனால் நகர்ப்புறச் சீரழிவின் அளவைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன் என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது, மியூனிக்கை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப்பில் 80,000 யூரோ சம்பளத்துடன் ஜெர்மனிக்கு மாறத் தயாராகி வரும் அவர், “எனக்கும் என் குடும்பத்திற்கும் தேவையான சுத்தமான காற்று, தண்ணீர், கலப்படம் இல்லாத உணவு, குண்டும் குழியுமில்லாத சாலைகள், அமைதியான அண்டைப்புறங்கள் ஆகியவை ஜெர்மனியில் கிடைக்கும்.
அதற்காக என் சம்பளத்தில் 50% வரியாக நீங்கள் எடுத்துக்கொண்டாலும் நான் மகிழ்ச்சியுடன் தருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சக என்.ஆர்.ஐ-களுக்கு அவர், “பெங்களூரு, மும்பை, டெல்லி மற்றும் நொய்டா போன்ற இடங்களுக்கு நீங்கள் திரும்ப வேண்டாம். நீங்கள் இதைவிடச் சிறந்ததற்குத் தகுதியானவர்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
