தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர், இரண்டாவது போட்டியில் செய்த பீல்டிங் தவறால், அணியில் தொடர்ந்து இடம் பெறுவதைப் பற்றிய சந்தேகம் எழுந்துள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்தபோது, பவுண்டரியை தடுக்க வேண்டிய தருணத்தில், டைவ் அடிக்காமல் பந்தை விட்டுக்கொடுத்ததாக கூறப்படுகிறது. பீல்டிங்கில் காணப்பட்ட இந்த சுறுசுறுப்பின்மை குறித்து பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் தொடர்ச்சியாக, சுந்தரை மூன்றாவது ஒருநாள் அணியில் இருந்து நீக்கினர். மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பதிலுக்கு, சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக அக்சர் படேல் சேர்க்கப்பட்டார். கூடுதலாக, ஷிவம் துபேவும் அணியில் இடம்பெற்றுள்ளார். காயம் ஏற்பட்டால் நீண்ட காலம் விளையாட முடியாத நிலை உருவாகும் என்பதால், ரிஸ்க் எடுத்துக்கொள்ள சுந்தர் தவிர்க்கிறார் என்ற விமர்சனங்களும் ஏற்பட்டுள்ளன. காயம் காரணமாக சுமார் 6 மாதங்கள் வரை வெளியேற வேண்டிய நிலை பல முறை ஏற்பட்டுள்ளது.

அஷ்வின் பதவியை பிடிக்க முயற்சி செய்து வரும் நிலையில், நீண்ட காலம் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால், மாற்று வீரர்கள் அந்த இடத்தை எளிதில் பிடித்துவிடுவார்கள் என்ற கவலை அவருக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. டி20 வடிவில் இந்தியாவுக்காக இதுவரை 57 போட்டிகளில் கலந்து கொண்ட சுந்தர், 254 ரன்கள் எடுத்துள்ளார். 53 போட்டிகளில் பந்துவீசி 51 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர், நல்ல ஆல்ரவுண்டராக கருதப்படுகிறார். சமீபகாலமாக பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் முன்னேற்றம் காட்டி வருகிறார்.

அதேசமயம், இந்திய அணியின் பீல்டிங் தரம் குறைந்து வருவதை மனதில் கொண்டு, பிசிசிஐ அதிக கவனம் செலுத்தி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு திறனுடன், பீல்டிங்கிலும் சிறந்து விளையாடும் வீரர்களுக்கே ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ரெகுலர் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதன் விளைவாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங்கில்தவறினால் சுந்தர், அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் நீக்கப்பட்டுள்ளார். இனி, அவரது மாற்றாக அக்சர் படேலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.