மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த தேசிய அளவிலான கபடி வீராங்கனை கிரன் சூரஜ் (29) என்பவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருமணம் செய்துகொண்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த சித்ரவதையால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரன் சூரஜ் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் நிதி நெருக்கடியில் தவித்து வந்தார்.
இந்தச் சூழ்நிலையைத் தெரிந்துகொண்ட ஸ்வப்னில் என்ற நபர், கிரனுக்கும் அவரது சகோதரனுக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பதிலுக்குத் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஒரு நிபந்தனை விதித்தார்.
கிரனும் வேறு வழியின்றி அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, கடந்த 2020ஆம் ஆண்டு ஸ்வப்னிலை திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஸ்வப்னில் சொன்னபடி கிரனுக்கோ அல்லது அவரது சகோதரனுக்கோ வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இதுகுறித்து ஸ்வப்னிலிடம் கிரன் கேட்டால், அவர் தாமதப்படுத்திக் கொண்டே வந்தார்.
இதனால் இருவருக்கும் இடையே சண்டைகள் அதிகரித்தன. இதற்கிடையில், கிரனுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள ஸ்வப்னில் விரும்பியபோது, “வேலை கிடைத்த பிறகுதான் அனைத்திற்கும் சம்மதிப்பேன்” என்று கிரன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னில், கிரனை சித்ரவதை செய்யத் தொடங்கினார்.
சித்ரவதையைத் தாங்க முடியாமல் கிரன் தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அப்படி இருந்தும், ஸ்வப்னில் தொடர்ந்து அலைபேசி மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் கிரனை மிரட்டி வந்தார். வேறு வழியில்லாமல், கிரன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
தொடர்ந்து வந்த சித்ரவதையின் காரணமாக மனமுடைந்த கிரன், தன் வீட்டில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தபோதிலும், மூன்று நாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கிரனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஸ்வப்னிலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
