என் அன்புக்குரிய புதுச்சேரி மக்களே, வணக்கம். மொழியால் இணைந்த நாம் இன்று புதுச்சேரி மண்ணில் ஒரு புதிய அரசியல் வரலாற்றைத் தொடங்கி இருக்கிறோம். யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசு, ஆளும் கட்சி-எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல், வெறுப்புணர்வு காட்டாமல், நமது நிகழ்வுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தது. குறிப்பாக, நமது பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, ஜனநாயக மாண்புடன் நடந்துகொண்டது.

இதற்காக, புதுச்சேரி அரசுக்கும், முதல்வர், உள்துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் காவல்துறைக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நமது இளைஞர் படையினர் மிகவும் கட்டுக்கோப்புடனும் பொறுப்புடனும் நடந்துகொண்டு, அவதூறு பேசுபவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்கள்.

அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைத்து, சூழ்ச்சிகள் செய்து, தி.மு.க அரசு நமது அரசியல் பயணத்தை, மக்கள் சந்திப்பை, மற்றும் பிரசார முயற்சிகளைத் தடுக்கப் பார்க்கிறது. ஆனால், அவை ஒருபோதும் வெற்றி பெறாது.

கழகத்தின் எதிர்பார்ப்புகள், வேண்டுகோள்கள், உத்தரவுகள் ஆகியவற்றை மதித்து, இந்த நிகழ்வு மிகப் பெரிய வெற்றி பெற உதவிய தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.