திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
புதிய வரவாக உள்ள தமிழக வெற்றிக் கழகம் தங்களது தலைமையில் புதிய அணியை வலுவாகக் கட்டமைக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே வலுவாக உள்ள திமுக, என்டிஏ கூட்டணியிலுள்ள சில கட்சிகளுடனும் தவெக கூட்டணிக்காகப் பேசி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், தவெக தலைமையில் ஒருவேளை கூட்டணி அமைந்தால், என்டிஏ கூட்டணி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட வாய்ப்பு இருப்பதாகக் கருத்துத் தெரிவித்தார். இது எடப்பாடி பழனிசாமி மீதான தனிப்பட்ட வருத்தத்தினால் அல்ல, யதார்த்தத்தைச் சொல்கிறேன் என்றும் தினகரன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் நகராட்சித் துறை உட்படப் பல்வேறு துறைகளில் ஊழல் முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் விமர்சித்தார். “பகுதிநேர ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரைப் பணி நிரந்தரம் செய்வதாகச் சொன்னார்கள், செய்யவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவோம் என்று சொன்னார்கள், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வந்தது என்று தெரியவில்லை,” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இத்தகைய குறைகள் இருந்தபோதும், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி முழுவதும் வெற்றி பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டிய தினகரன், மிருக பலத்தோடு இருக்கும் திமுகவை வீழ்த்த வேண்டுமானால், அக்கட்சிகள் தங்களைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
