திமுக மாவட்டச் செயலாளர்கள், பகுதி/மாநகர/பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பானது ஆகும். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்துத் தினந்தோறும் மாலை நேரங்களில் நிர்வாகிகளிடம் நிறுவன ரீதியான விவரங்களைக் கேட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
வரும் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகவிருக்கும் நிலையில், திமுக நிர்வாகிகள் அதனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் பட்டியலில் பெயர் விடுபட்டால் அதனைச் சேர்ப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் பல்வேறு அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளார்.
