சமூக ஊடகங்களில் ஓடும் ரயிலின் மேல் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் ஒரு இளைஞரின் வீடியோ வைரலாகி, பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வேகமாக பாயும் ரயிலின் கூரையில் ஸ்கேட்டிங் செய்ய முயலும் அந்த இளைஞர், சில நொடிகளில் சமநிலையை இழந்து கீழே விழுவது போன்ற காட்சி காணொளியில் இடம்பெற்றுள்ளது.

வீடியோவில், இளைஞர் ஸ்கேட்போர்டில் நின்று ரயில் நகரும் வேகத்திலும் காற்றின் அழுத்தத்திலும் சமநிலையைப் பேண முயல்கிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில், ரயில் திறந்த பகுதியில் சென்று கொண்டிருக்கிறது. சில நொடிகளுக்குள் அவரது கால் வழுக்க, பின்னோக்கி தடுமாறி கீழே விழுவதைப் போல காட்சி தோன்றுகிறது. இதே நேரத்தில் எதிரே செல்லும் மற்றொரு ரயிலில் இருந்த பயணிகள் முழு சம்பவத்தையும் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

 

खत्म टाटा बाय बाय pic.twitter.com/ki89V8kQHK

— Rajesh Beniwal (@BeniwalRajesh1) December 6, 2025

 

பார்வையாளர்களை நடுங்கவைக்கும் அளவுக்கு திடீரென நடைபெறும் இந்தக் காட்சி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால் பின்னர் இது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட செயற்கைக் காட்சி என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த வீடியோவை @BeniwalRajesh1 என்ற கணக்கு பகிர்ந்துள்ளது. ஏற்கனவே மில்லியன் கணக்கானோர் இதைப் பார்த்து வருகின்றனர். பலர் இதை உண்மையானதாக நினைத்து பதறிய நிலையில், சிலர் இது AI உருவாக்கம் என குறிப்பிடுவதைத் தொடர்ந்து விவாதம் தீவிரமடைந்துள்ளது.

பயனர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர். “இது AI வீடியோ; தேவையில்லாமல் பயப்பட வேண்டாம்,” என ஒருவர் பதிவிட்டுள்ளார். “இத்தகைய ஸ்டண்ட் செய்வது உயிரையும், பெற்றோரின் நிம்மதியையும் ஆபத்தில் ஆழ்த்தும்,” என மற்றொருவர் கண்டனம் தெரிவித்துள்ளார். “இன்னும் ஸ்டண்ட் செய்தால் அதிர்ஷ்டம் கூட உங்களை காப்பாற்றாது,” என எச்சரிக்கும் வகையில் கருத்து பதிவிட்டவர்களும் உள்ளனர். மேலும் AI தொழில்நுட்பம் உண்மைக்குச் சமமாக தோன்றும் காட்சிகளை உருவாக்கும் திறன் பெற்றிருப்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.