தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு, கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் பணியில் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாகவும், இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதாகவும் செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் இது என்பதால், கொங்கு மண்டலத் தொண்டர்கள் மத்தியில் இது பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி கேட்டு, மாவட்ட ஆட்சியரிடம் முறையாக மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுமதி கிடைத்த உடனேயே, பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொங்கு மண்டலத்தின் முக்கிய மையமான ஈரோட்டில் நடைபெறும் விஜய்யின் இந்தப் பொதுக்கூட்டம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தவெக-வின் பலத்தைக் காட்டுவதற்கான ஒரு முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது.
