அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செங்கோட்டையன் வெளியிட்ட “விஜய் அடுத்த முதலமைச்சர்” என்ற கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கடும் பதிலளித்தார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது: “ஒருவர் சொன்னார் என்பதற்காக ஏன் அதைக் கொண்டு இந்தளவு பேச வேண்டும்? இதுபோன்ற பலரும் பல கருத்துகளைச் சொல்வார்கள். புதிதாக வருபவர்கள் தங்கள் விருப்பத்தைக் கூறுவார்கள். ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்ற மாதிரி, எல்லாரும் தங்கள் தரப்பையே உயர்த்திப் பேசுவார்கள். நாங்கதான் அடுத்த ஆட்சிக்கு வரப் போகிறோம் என்று பலரும் சொல்வது போல இது ஒன்றும் புதிதில்லை,” என்றார்.
அடுத்து, செங்கோட்டையனின் நீண்டகால அதிமுக பயணம் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இருந்தவர்தான் என்று சொல்லிக் கொண்டு இருப்பதால் மட்டும் பொருள் இல்லை. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியே இதுதான். இரட்டை இலை இங்குதான் இருக்கிறது. கட்சி அலுவலகமும் இங்கேதான். அவர் 9 தடவை MLA-ஆகவும் பலமுறை அமைச்சராகவும் இருந்தார். அதைக் கொடுத்தது யார்? மக்கள் இரட்டை இலை சின்னத்துக்குத்தான் வாக்களித்தார்கள். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு அடுத்து எடப்பாடியார்,” என தெரிவித்தார்.
மேலும் “இதே எடப்பாடியாரை செங்கோட்டையனே புகழ்ந்தார். ஏதோ ஒரு கோபத்தால் இன்று வெளியேறிவிட்டார். ‘எனக்கு எந்தக் கட்சியும் வேணாம், எந்தப் பதவியும் வேணாம்; எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவில்தான் இருப்பேன்’ என்று சொல்பவர்தான் உண்மையான அதிமுக ரத்தம். எல்லோரும் அதிமுகவினர் அல்ல,” என்றார்.
மேலும் “நீங்கள்தான் பத்திரிக்கையாளர்கள். ஊடகங்கள்தான் சில விஷயங்களை தூக்கி எறிகிறீர்கள். இன்று கூட ஒரு புள்ளிவிவரம் வெளியிட்டிருக்கிறார்கள். இவை எல்லாம் நீடிக்கும் விஷயங்களா? நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். மக்கள் தான் எஜமான்; அவர்கள் நினைப்பதே நடக்கும்,” என்றார். மேலும் யார் புதிதாக வந்தாலும் கடைசியாக மக்கள் மனதில் இருப்பது இரண்டே பேர்தான் என்று கூறினார்.
