தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, நட்சத்திர பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அணியில் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஹர்திக் பாண்டியா அணிக்குத் திரும்பியதால் ரிங்கு சிங் வெளியேற்றப்பட்டார், இது நடக்க வேண்டிய ஒன்றுதான் என்று கூறினார்.

மேலும், இந்த அணி 2026 டி20 உலகக் கோப்பைக்காகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அணியில் 90-95% இருக்கலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாண்டியா மற்றும் அவருடன் இருக்கும் மற்றொரு ஃபினிஷரின் ஆட்டமே இந்தியா மீண்டும் கோப்பையை வெல்வதற்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பதான் மேலும் பேசுகையில், இந்திய அணியின் சில விஷயங்கள் தெளிவாக வேண்டும் என்று கூறினார். உதாரணமாக, பும்ரா, ஹர்திக் மற்றும் ஷிவம் துபே ஆகியோருடன் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர், குல்தீப் மற்றும் வருண் சக்கரவர்த்தியைத் தேர்வு செய்வார்களா? என்பது குறித்து தெளிவு தேவை என்றார்.

அர்ஷ்தீப், பும்ராவுடன் இணைந்து தொடக்கத்தில் பந்துவீசுவாரா, ஹர்திக் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இருப்பாரா என்பதையும் பார்க்க வேண்டும். இருப்பினும், நடுத்தர வரிசை மற்றும் ஃபினிஷர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும், இந்தத் தொடர் இந்தியாவின் பேட்டிங் வரிசைத் திட்டங்கள் குறித்த தெளிவான படத்தைக் கொடுக்கும் என்றும் பதான் வலியுறுத்தினார்.