மஹாராஷ்டிரா, கோலாப்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு  திருமண விழாவில் அரிதாகக் காணப்படும் ஒரு மனிதநேயம் நிறைந்த சம்பவம் நடந்து, சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பண்டிவாடேயில் நடந்த திருமண நிகழ்ச்சியில், ஒரு பெண் விருந்தினர் திடீரென மயங்கி மேடையில் விழுந்ததால் அங்கிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர்.

அப்போது, மேடையில் மணப்பெண்ணாக இருந்தவர் மருத்துவர் என்பதால், ஒரு நொடி கூட யோசிக்காமல் சம்பவ இடத்திற்குச் சென்று சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். மணமகள் காட்டிய அதிரடி நடவடிக்கையால், சில நிமிடங்களில் அந்தப் பெண்ணின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. மேடையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை, மருத்துவர் மணமகள் மேற்கொண்ட துரித சிகிச்சையால் மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

 

சம்பவத்தின் முழுக்காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது. அதில் மணமகள் மயங்கி விழுந்த பெண்ணை அணுகி, அருகிலிருந்தவர்களிடம்: கால்களை மட்டும் தூக்கச் சொல்லுதல், முகத்தைத் தட்டி உணர்வு திரும்பச் செய்வது, “நீ காலையில் சாப்பிட்டாயா?” என விசாரித்தது என, துல்லியமாகவும் மருத்துவ ரீதியிலும் செயல்பட்டது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

சிறிது நேரத்திலேயே பெண்ணுக்கு சுயநினைவு திரும்ப, அங்கிருந்த பார்வையாளர்கள் மணமகளின் உடனடி செயல்பாட்டையும் மனிதநேயத்தையும் பாராட்டினர். இந்தக் காட்சி வெறும் திருமணக் காட்சி அல்ல, “மனிதநேயம், தைரியம் மற்றும் தொழில்முறை முனைப்பின் அருமையான எடுத்துக்காட்டு” என்று உள்ளூர்வாசிகள் புகழ்ந்தனர். மயங்கிய பெண் பின்னர் மணமகளுக்கு நன்றி தெரிவித்து, அவரின் உடனடி சிகிச்சை தான் விரைவில் மீள உதவியதாக கூறினார்.

பண்டிவாடேயில் நடந்த இந்த திருமணம், குடும்பங்களின் இணைப்பைத் தாண்டி,
ஒரு மருத்துவர் மணமகளின் வீரத்தையும் தன்னலமற்ற சேவையையும் காட்டிய மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது. மேலும் “பண்டிகை நாளாக இருந்தாலும், மனித உயிருக்கு உதவ முன்வருபவர்களே உண்மையான ஹீரோக்கள்” என்ற கருத்தும் நெட்டிசன்களிடையே பரவி வருகிறது.