தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் விராட் கோலி 135 ரன்களும், ரோஹித் சர்மா 57 ரன்களும் குவித்து, 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினர். இந்நிலையில், இப்போட்டியில் 70 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்குப் பயத்தைக் கொடுத்த தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ யான்சன், விராட் கோலியை எதிர்கொள்வது குறித்துப் பேசியுள்ளார்.
“தொலைக்காட்சியில் விராட் கோலியைப் பார்த்து வளர்ந்த நான், இப்போது அவருக்கு எதிராகப் பந்து வீசுவது எரிச்சலூட்டுவதாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரரைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்பதால், “அவர் எப்போதும் நான் முதல் 10 – 15 பந்துகளில் அவுட்டாக்க முயற்சிப்பேன்” என்றும் யான்சன் கூறியுள்ளார்.
முதல் 15 பந்துகளில்தான் விராட் கோலி ஆடுகளம் குறித்து அறிந்து கொண்டு, அதற்குத் தகுந்தாற்போல் தங்களை மாற்ற முயற்சிப்பார். “ஆனால், ஒருமுறை அவர் செட்டிலாகி விட்டால், தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம்” என்றும் மார்கோ யான்சன் பாராட்டியுள்ளார்.
இந்திய அணி வீரர்கள் அனைவரும் எப்படி விளையாட வேண்டும் என்பதைத் தெரிந்தவர்கள் என்பதால், எதிரணி எப்போதும் ‘பி’ மற்றும் ‘சி’ திட்டங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா 350 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், தென் ஆப்பிரிக்கா 332 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
