மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் (Panna Tiger Reserve), ஒரு சில சுற்றுலாப் பயணிகள் ஐந்து புலிகள் அடங்கிய ஒருக் கூட்டத்தின் பாதையைத் தங்கள் சஃபாரி வாகனங்களால் (Safari Vehicles) மறித்து, ஆபத்தான வகையில் அருகில் சென்று புகைப்படம் எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அலட்சியமான செயல் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பூங்கா நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

அந்த வைரல் வீடியோவில், வனப் பாதையில் ஐந்து புலிகள் கடந்துச் செல்ல முயலும்போது, சஃபாரி ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை மிகவும் அருகில் நிறுத்தி, அவற்றின் பாதையை மறிக்கின்றனர். இதனால், புலிகள் அமைதியற்ற நிலையில் காணப்பட்டன. பயணிகள் சிலர் மிகவும் ஆபத்தானத் தொலைவில் இருந்து செல்ஃபி (Selfie) எடுப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) வழிகாட்டுதல்கள் தெளிவாக, வனவிலங்குகளிடம் இருந்து குறைந்தபட்சப் பாதுகாப்பான தூரத்தைப் பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இந்த விதிகளை மீறியது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் வனவிலங்குகள் இரண்டின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வனவிலங்கு வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.