மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு நிலவி வரும் சூழலில், புனேவில் என்.சி.பி. (அஜித் பவார் பிரிவு) எம்.எல்.ஏ. ஒருவரின் கார் மோதி, 4 வயதுச் சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ. ஞானேஷ்வர் கட்கே (Dnyaneshwar Katke)-வின் கருப்பு மெர்சிடிஸ் எஸ்யூவி (Mercedes SUV) கார் மோதியதில், சுப்ரா போர்ஹாடே (Shubhra Borhade) என்ற அச்சிறுமிக்குப் படுகாயம் ஏற்பட்டது.

சம்பவம் நடந்த போது, எம்.எல்.ஏ. ஞானேஷ்வர் கட்கே, சிருர் நகராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் (Civic Poll Campaigning) பங்கேற்பதற்காகப் புனே – அகமதுநகர் நெடுஞ்சாலையில் (Pune–Ahmednagar Highway) பயணம் செய்து கொண்டிருந்தார்.

போர்ஹாடே மாலா அருகே, வேறொரு வாகனத்தின் மறைவில் இருந்துச் சாலை கடக்க முயன்ற சிறுமி சுப்ரா மீது, எம்.எல்.ஏ.வின் கார் மோதியது.

ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டாலும், காரின் வேகத்தினால் சிறுமியைத் தாக்காமல் தடுக்க முடியவில்லை. மோதிய வேகத்தில் சிறுமி தலைகீழாகச் சாலையில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.

உடனே எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆட்கள் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறுமியின் நிலை கவலைக்கிடமாக (Critically Injured) உள்ளதால், அவர் மேல் சிகிச்சைக்காகப் புனேக்கு மாற்றப்பட்டுள்ளார்.