விஷப் பாம்புகளில் மிகவும் ஆபத்தானதும், நீண்டதும் ஆன கிங் கோப்ரா பாம்பை ஒரு இளம்பெண் பிடித்து மீட்க முயன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. கிராமம் ஒன்றில் கண்டறியப்பட்ட இந்தக் கொடிய பாம்பைப் பிடிக்க அந்தப் பெண் முயன்றபோது, திடீரென அந்தப் பாம்பு அவரைத் தாக்க வருகிறது. எனினும், அந்தப் பெண் சமயோசிதமாகச் சற்றே பின்வாங்கியதால், உயிர் பிழைத்தார்.
இவ்வளவு பெரிய ஆபத்துக்குப் பின்னரும் சிறிதும் கலங்காமல், அந்தப் பெண் மீண்டும் கிங் கோப்ராவை நோக்கிச் சென்று, மெதுவாகவும் கவனமாகவும் அதைப் பிடித்து, காற்றில் தூக்கிக் காட்டுகிறார். அந்தப் பாம்பின் அளவைப் பார்க்கும்போது, அது 10 அடிக்கு மேல் நீளம் கொண்டதாகத் தெரிகிறது. இவ்வளவு பெரிய மற்றும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பைத் தொடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர முடிகிறது.
View this post on Instagram
இந்தச் செயல் தொடர்பான காணொளியை saiba__19 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு, “கிராமத்தில் கண்டறியப்பட்ட கிங் கோப்ரா இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டது. பாம்புக்கு எந்தத் தீங்குமின்றி அதைப் பிடித்த பிறகு, அதன் இயற்கையான வாழ்விடமான காட்டில் விடப்பட்டது. காட்டுயிர்களைப் பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் கையாள்வது எப்படி என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் விதமாகவே விழிப்புணர்வு மற்றும் ஆவணப்படுத்துதலுக்காக மட்டுமே இந்தக் காணொளி படமாக்கப்பட்டது.
சாதாரண மக்கள் யாரும் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் செய்ய முயற்சிக்கக் கூடாது” என்ற குறிப்புடன் பகிர்ந்துள்ளது. இந்தக் காணொளியை இதுவரை 62 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பல லட்சக்கணக்கானோர் இந்தக் காணொளிக்கு லைக் செய்தும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டும் வருகின்றனர். சிலர், “சகோதரி, நீங்கள் மிகவும் தைரியசாலி” என்று பாராட்ட, வேறு சிலரோ, “இது அபாயகரமான மற்றும் உயிருக்கு அச்சுறுத்தும் சாகசம்” என்று எச்சரித்துள்ளனர். பாம்புகளுடன் ஒருபோதும் விளையாடக் கூடாது என்றும் பல பயனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
