இன்றைய உலகில் சிலர் நேர்மைக்கும் மனிதநேயத்திற்கும் உதாரணமாகத் திகழ்கின்றனர். மும்பையைச் சேர்ந்த நிகில் சைனி (Nikhil Saini) என்ற சுற்றுலாப் பயணி, மணாலிக்கு (Manali)ச் சென்றபோது, தனது காரில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கேமராக்கள் மற்றும் விலையுயர்ந்தப் பொருட்கள் அடங்கிய பையை மறந்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

ஆனால், அந்த டாக்ஸி ஓட்டுநர் தனது நேர்மையால், அதனை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைத்து, பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார். நிகில் சைனி தனது பயணத்தின்போது, தனது கேமராக்கள் அடங்கிய பையை காரில் மறந்துவிட்டார்.

ஒரு கேமராவின் விலை சுமார் ₹4 லட்சம் என்றும், மற்றொன்றின் விலை ₹4-5 லட்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு விலையுயர்ந்தப் பொருட்களைக் கண்டதும், சிலருக்கு பேராசை வர வாய்ப்புண்டு.

ஆனால், ஓட்டுநரான சதீஷ் குமார் (Satish Kumar), சிறிதும் தாமதிக்காமல் நிகிலைத் தேடிக் கண்டுபிடித்துப் பையைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் குறித்து நிகில் வீடியோவைப் பகிர்ந்து, “உண்மையான ஹீரோக்கள் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். இவ்வளவு நல்ல மனிதர்கள் கிடைப்பது கடினம்” என்று நெகிழ்ச்சியுடன் ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தார்.