தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கே.வேட்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (32), அரூர் திரு.வி.க. நகரில் கடந்த 7 ஆண்டுகளாக ஜிம் மற்றும் பிட்ட்நஸ் சென்டர் நடத்தி வருகிறார். ஜிம் சென்டருக்கு வந்த ஒரு பெண்மணியின் பிளஸ்-1 படிக்கும் மகளுடன் சிலம்பரசன் நெருக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் அந்த மாணவி தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த சிலம்பரசன் “வீட்டிற்கு விட்டுச் செல்கிறேன்” என்று கூறி மாணவியை காரில் ஏற்றிச் சென்றார். ஆனால் மாணவியின் வீட்டிற்கு செல்லாமல், கடத்தூர் செல்லும் சாலைக்குப் காரை மாற்றிச் சென்றதாக தெரிகிறது.
பின்னர், காரை ஓரமாக நிறுத்தி, குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து குடிக்க வைத்தும், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தும், வெளியில் இந்த விவகாரம் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார் என குற்றச்சாட்டு நிலவுகிறது.
பின்னர், இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சம்பவத்தை தனது தாயாரிடம் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டதில் சம்பவம் உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதன் பேரில், பெண்கள் பாதுகாப்பு சட்டமான போக்சோ விதிகளின் கீழ் சிலம்பரசன் போலீசால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். மேலும் சிலம்பரசனுக்கு மனைவியும் ஒரு மகனும் இருப்பதாகவும், தற்போது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும் போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
