நாகர்கோவிலில் நிருபர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு பல்வேறு அரசியல் மற்றும் பொதுநல விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தேர்தலுக்கு முன்பாக சட்டமன்றம் கூட வாய்ப்பு உள்ளது. செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அவர்கள் தற்போது எம்.எல்.ஏக்கள் அல்ல.”
இலங்கையின் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கரூரில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது: “கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில், சிலர் அங்கிருந்து ஓடி விட்டார்கள். ஆனால் முதலமைச்சர் உடனடியாக நேரில் சென்று, தேவையான மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்தார். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.” மக்கள் யாருடைய மனிதநேயம் உண்மை என்பதை பார்த்திருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய அவர், “2026 தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும். மீண்டும் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வார். அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வது அவர்களது தனிப்பட்ட முடிவாகும்.” என்று கூறினார்.
செங்கோட்டையன் தொடர்பான அரசியல் விவகாரங்களைப் பற்றி அவர் மேலும் கூறினார்: “செங்கோட்டையன் அமித் ஷாவை இரண்டு முறைச் சந்தித்தார்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் பேசியுள்ளார். பத்திரிகைகளில் அவர் அமித் ஷா சொல்லிதான் செயல்படுவதாக செய்தி வந்தது. அவர் ஒரு மதிப்புக்குரிய சட்டமன்ற உறுப்பினர். ஆனால் அவர் சேர்ந்ததும், அவரை ஸ்லீப்பர் செல் என்று கூறுகிறார்கள். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். சதி செய்வதில் வல்லவர்கள்.” மேலும் 41 பேர் இறந்து கிடந்த நிலையில் அவர்களை விட்டுவிட்டு ஓடியவர்களிடம் செங்கோட்டையன் இணைந்துவிட்டது கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
