உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாஹரைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர், வெறும் ₹25,000 செலவில் ஒரு செயற்கை நுண்ணறிவுரோபோ ஆசிரியரை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சிவ சரண் இண்டர் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் ஆதித்யா குமார் என்ற அந்த இளைஞர், தான் உருவாக்கிய இந்த ரோபோ ஆசிரியருக்கு ‘சோஃபி’ என்று பெயரிட்டுள்ளார். இந்த ரோபோ, உயர்தர தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுடன் பேசுவது மற்றும் கற்பிப்பது போன்ற திறன்களைக் கொண்டுள்ளது.

இந்த ரோபோவைத் தான் உருவாக்கிய விதம் குறித்துப் பேசிய ஆதித்யா குமார், “பெரிய நிறுவனங்கள் ரோபோக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் ஒரு LLM சிப்செட்டை நான் பயன்படுத்தி இதை உருவாக்கியுள்ளேன். இந்த ரோபோவால் மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க முடியும். இப்போது இவளால் பேச மட்டும்தான் முடியும்; விரைவில் இவர் எழுத கூடிய வகையில் வடிவமைத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தன்னைப் போலவே கிராமப்புற மாணவர்களும் ஆராய்ச்சி மேற்கொள்ள வசதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் முறையான ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இந்த ஏ.ஐ. ஆசிரியை ‘சோஃபி’ இந்தி மொழியிலும் குரல் திறன்களிலும் இயங்கினாலும், கூடுதல் வளங்கள் கிடைத்தால் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் ஆதித்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.