மும்பை: ரயில் டிக்கெட் இல்லாமல் பயணித்ததாகக் கூறப்படும் ஒருவரை பயணச் சீட்டு பரிசோதகர் (TTE) ஒருவர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று மிரட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம், ரயில்வே ஊழியர்களின் நடத்தை, பயணிகளின் உரிமைகள் மற்றும் அதிகாரப் பயன்பாட்டின் வரம்புகள் குறித்து பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

‘lafdavlog’ என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய இந்த வீடியோவில், நெரிசலான ரயில் நிலையத்தில் TTE ஒருவர், தப்பிச் செல்ல முயல்கின்ற பயணியின் காலரைப் பிடித்து இழுப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது. பயணி தன்னை விடுவிக்க மீண்டும் மீண்டும் முயன்றும், அதிகாரி அவர் மீது அழுத்தம் கொடுத்து நடைமேடை வழியாக இழுத்துச் செல்வது போல் காட்சிகள் தெரிகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by lafdavlog (@lafdavlog)

அத்துடன், அவருடன் இருந்த பெண் TTE ஒருவர் பயணியின் பையைப் பிடித்து வைத்திருப்பதும், ஆண் TTE ஒருவர் வாய்மொழி மிரட்டல் விடுப்பது போல் நடப்பதும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பதிவுடன் சேர்த்து, “முறையான ரயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது தவறு என்றாலும், அதற்கு யாரும் தாக்கப்படவோ அவமானப்படுத்தப்படவோ கூடாது” எனும் குறிப்பும் இடம் பெற்றது.

வீடியோ வெளியானதும்  கடும் எதிர்வினைகள் எழுந்துள்ளன. பலர் TTE-யின் நடத்தை முறைகேடானது என்றும், இது தேவையற்ற துஷ்பிரயோகம் என்றும் குற்றம்சாட்டினர். ஒரு பயனர், “இவரை இடைநீக்கம் செய்ய வேண்டும்” எனக் கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “@irctc.official இதற்காக கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்” என்று பதிவு செய்துள்ளார். மேலும் ரயில்வே தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.