தேனி மாவட்டம் கூடலூர் அருகே தம்மணம்பட்டியைச் சேர்ந்த குமார்–சங்கீதா தம்பதியின் மகள் பூவிகா (17), கூடலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 21-ம் தேதி அவரது பிறந்தநாளாக இருந்தது. அந்நாளில் பெற்றோர் புத்தாடை மற்றும் கேக் வாங்கித் தரவில்லை என்பதால், பூவிகா மனவருத்தம் அடைந்து, பெற்றோரிடம் இதுகுறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், சம்பவத்தன்று காலை பூவிகா திடீரென வாந்தி எடுத்தார். இதற்குக் காரணம் என்ன என்று பெற்றோர் கேட்டபோது, “பிறந்தநாளுக்கு எதுவும் செய்து தரவில்லை… அதனால் விஷம் குடித்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை உடனடியாக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக பூவிகா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சையளித்தும் பலனளிக்காமல், பூவிகா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளம் பருவ மாணவியின் இந்த துயர மரணம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
