திருச்சி, புங்கனூரைச் சேர்ந்த ராஜ்குமார் (29) என்ற இளைஞர், திருநங்கையாக மாற விரும்பிய நிலையில், அவரது பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் பார்த்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாத்திரைகளை உட்கொண்டு விபரீதம் நிகழ்ந்துள்ளது.
பெயிண்டிங் வேலை செய்து வந்த ராஜ்குமார், வேலை செய்யும் இடத்தில் திருநங்கைகளுடன் பழகியதால், அவர்களின் பாவனைகளைப் பின்பற்றி, வீட்டில் பெண்களின் ஆடைகளை அணிந்து ரசித்துள்ளார்.
ராஜ்குமார், திருநங்கையாக மாற அறுவை சிகிச்சை (Operation) செய்ய முயற்சி எடுத்த நிலையில், அதைக் கண்டித்த அவரது குடும்பத்தினர், அவருக்கு அவசரமாகத் திருமணம் செய்து வைக்கப் பெண் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த அதிர்ச்சியில், இரண்டு நாட்களுக்கு முன்பு, ராஜ்குமார் மற்றும் அவரது பெற்றோர் (கொன்னாச்சி, தனலட்சுமி) ஆகியோர் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஹார்மோன் மாற்றத்துக்கான மாத்திரைகள் அதிகம் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ராஜ்குமார் அளவுக்கு அதிகமாக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது திருமணத்துக்குத் தடை போட்டதால் விஷம் அருந்தியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். மயங்கிய நிலையில் உள்ள அவரது தாய், தந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
