உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர்நகர் (Muzaffarnagar) மாவட்டத்தில் நடந்த ஒரு திருமணத்தில், மணமகன் திருமணச் சடங்குகளுக்கு மத்தியில், வரதட்சணையாகப் பெற்ற ரூ. 21 லட்சம் பணத்தை அனைவரும் முன்னிலையில் மணமகளின் குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைத்தார். இந்தச் செயல், அங்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், மணமகனைப் பாராட்ட வைத்தது.

ஷாஹபுதீன்பூர் கிராமத்தைச் சேர்ந்த அதிதி சிங் என்பவருக்கும், நாகவா கிராமத்தைச் சேர்ந்த அவதேஷ் ராணா என்பவருக்கும் நடந்த திருமணத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்தது. மணமகளுக்குத் தந்தை இல்லாத நிலையில், அவரது மாமா மற்றும் தாத்தா ஆகியோரின் மேற்பார்வையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு, மணமகன் அவதேஷ் ராணா, “வரதட்சணை வாங்க மாட்டேன் என்று நான் ஆரம்பத்திலேயே தெளிவாகக் கூறிவிட்டேன். இந்தப் பணம் அதிதியின் தந்தையின் கடின உழைப்பு. இது அவளது உரிமை, எனக்கு அல்ல” என்று கூறி முழுப் பணத்தையும் திரும்ப அளித்தார்.

இந்தச் செயலால் உணர்ச்சிவசப்பட்ட மணமகள் அதிதி, தனது கணவருக்கு நன்றி தெரிவித்தார். அவதேஷ் ராணாவின் இந்த முடிவு வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான வலுவான செய்தியைப் பரப்பியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.