ஆந்திரப் பிரதேசத்து அன்னமய்யா மாவட்டம் பிக்கிம்வாரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த தேவிஸ்ரீ (21) என்ற மாணவி, பெங்களூருவில் மர்மமான சூழலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள ஒரு பிரபலக் கல்லூரியில் பி.பி.எம். படித்து வந்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கி வந்தார்.
நேற்று காலை, தேவிஸ்ரீ தனது பழக்கத்திற்குரிய இளைஞர் பிரேம் வர்தனுடன், தோழியின் அறைக்கு சென்றதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நேரத்தில், தேவிஸ்ரீயின் தோழி அறைக்கு வெளியே சென்றிருந்தார்.
அறைக்குள் தேவிஸ்ரீ மற்றும் பிரேம் வர்தன் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் போது, திடீரென ஆவேசமடைந்த பிரேம் வர்தன், கூர்மையான ஆயுதத்தால் தேவிஸ்ரீ மீது தாக்குதல் நடத்தி கொடூரமாகக் கொலை செய்து தப்பி ஓடியுள்ளார்.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேவிஸ்ரீயின் உடலை மீட்டனர். சம்பவத்தை சுற்றியுள்ள ஆதாரங்களை சேகரித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கொலைக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளிவரவில்லை. கைது செய்யப்பட்டால் மட்டுமே பிரேம் வர்தனின் நோக்கமும், இருவருக்குமிடையே ஏற்பட்டிருந்த பிரச்சினையும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தை அறிந்தவுடன் தேவிஸ்ரீயின் பெற்றோர் நேற்று பெங்களூரு வந்தனர். மகளின் உடலைப் பார்த்து அவர்கள் அழுது உடைந்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்தச் சம்பவம் கல்லூரி மாணவர்களும், அப்பகுதி மக்களும் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
