சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டம் பகிஷா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதாவது பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த குல்திபன் டாப்னோ மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவிக்கு தலைமை ஆசிரியர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மனஉளைச்சலில் இருந்த மாணவி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு காரணம் தலைமை ஆசிரியர் குல்திபன்தான் என குறிப்பிடப்பட்டிருந்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர்.
இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமை ஆசிரியர் குல்திபன் டாப்னோவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
