கடந்த 2017-ஆம் ஆண்டு போரூர் அருகே 6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் குற்றவாளி தஷ்வந்துக்கு 2018-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.தாயைக் கொன்ற வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்ட தஷ்வந்த், சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம், சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றச்சாட்டை நிரூபிக்க வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல மற்றும் டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை எனக் கூறி, மரண தண்டனையை ரத்து செய்து, தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தக்  தீர்ப்பு, தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்து, தஷ்வந்த்தை விடுவித்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்தச் சூழலில், சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, தற்போது தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த மறு சீராய்வு மனுவை, அந்த வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு நாளை மறுநாள் விசாரிக்க உள்ளது.