கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மீது அதிக பணிச்சுமை, எந்த நேரத்திலும் நடைபெறும் மீட்டிங்குகள், தனிப்பட்ட வாழ்க்கைக்கே இடமில்லாத வேலை முறை போன்றவை நவீன ‘கொத்தடிமை’ வாழ்க்கையை உருவாக்கி வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை வலுப்படுத்தும் வகையில் பல சம்பவங்கள் வெளிவருகின்றன.
சமீபத்தில் இப்படியான இன்னொரு சம்பவம் Reddit சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதுடன் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கார்ப்பரேட் நிறுவன ஊழியர், பிரசவ வலி ஏற்பட்ட தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவரை கவனிப்பதற்காக 2 நாட்கள் விடுப்பு கேட்டுள்ளார். இதற்கான மேலாளருடனான வாட்ஸ்அப் உரையாடல் ஸ்கிரீன்ஷாட் பதிவிடப்பட்டதும் பதிவை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த பதிவின்படி, ஊழியர் 2 நாள் விடுப்பு கேட்டபோது, மேலாளர் “இப்போது விடுப்பு கொடுக்க முடியாது; அடுத்த வாரம் எடுங்கள். உங்கள் மனைவியின் பிரசவத்திற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? வேண்டுமானால் மருத்துவமனையிலிருந்தே வேலை செய்ய முடியுமா?” என்று பதிலளித்துள்ளார்.
இதற்கு அதிர்ச்சியடைந்த ஊழியர், “அது சாத்தியமில்லை. மனைவியை கவனிக்க வேண்டியது எனது பொறுப்பு. மருத்துவர் ஆலோசனை, மருந்து வாங்குதல் உள்ளிட்ட பல வேலைகள் உள்ளன. மருத்துவமனையில் இருந்து அலுவலகப் பணிகளைச் செய்வது முடியாது,” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையடுத்து, மேலாளர் விருப்பமின்றி விடுப்பை அங்கீகரித்ததாக பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கார்ப்பரேட் நிறுவனங்களின் மனிதநேயமற்ற வேலை சூழலைக் குறித்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
