ஏடிஎம் மையங்களுக்கு பணம் ஏற்றிச் சென்ற CMS Info Systems நிறுவன வாகனத்தை இடைமறித்து, ஆயுதம் காட்டி 7.11 கோடி ரூபாயைக் கொள்ளையடித்த வழக்கில், பெங்களூரு காவல்துறை விசாரணை முன்னெடுத்து வந்தது. இந்த வழக்கில், ஐதராபாத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் அன்னப்பா நாயக் (போலீஸ் கான்ஸ்டபிள்), CMS நிறுவன ஊழியர் சேவியர், மற்றும் கொள்ளைக்குச்சார்ந்த வாகனத்தின் நடமாட்டத்தை கண்காணித்த கோபி பிரசாத் ஆகியோர் அடங்குவர்.
விசாரணையில், கொள்ளை திட்டத்தின் மூளையாக கான்ஸ்டபிள் அன்னப்பா நாயக் செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. தனது போலீஸ் அனுபவத்தை பயன்படுத்தி, போலீசாரிடமிருந்து எவ்வாறு தப்பிக்கலாம், சோதனைச் சாவடிகள் எப்போது எங்கே அமைக்கப்படுகின்றன என்பதனை தனது கூட்டாளிகளுக்கு அவர் வழிகாட்டியதாக கூறப்படுகிறது.
கொள்ளை நடந்த நாளில் அன்னப்பா நாயக் பணியில் இல்லாதபோதும், ஒரு சோதனைச் சாவடிக்கு வந்து, கொள்ளை தொடர்பான விசாரணையில் அளவுக்ககு மீறி செயல்பட்டுள்ளார். கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்துவிட்டார்களா என தொடர்ந்து கேள்வி எழுப்பியதும், இணையத்தில் வெளியான புகைப்படம் உண்மையா என விசாரித்ததும், அங்கு இருந்த அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அவர் வயர்லெஸ் தகவல்தொடர்புகளையும் அங்கு நின்றபடியே கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைமை காவலர் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அன்னப்பாவின் செயல்கள் கண்காணிக்கப்பட்டு, விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்பட்டார்.
கடுமையான விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டதை அன்னப்பா நாயக் ஒப்புக்கொண்டதாகவும், சேவியருடன் அவரது தொடர்புகள் செல்போன் அழைப்புகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது மூவரும் 10 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பான மேலான விசாரணை நடைபெற்று வருகிறது.
