தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து, 20 வயதிலேயே பிஸியான நடிகையாக வலம் வந்த பிரதியுஷாவின் (Prathyusha) மர்ம மரண வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
1999-ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கிய ‘மனுநீதி’ படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்த இவர், விஜயகாந்துடன் ‘தவசி’, பிரபுவுடன் ‘சூப்பர் குடும்பம்’, ராமராஜனுடன் ‘பொன்னான நேரம்’ உட்பட ஐந்து ஆண்டுகளில் 11 படங்களில் நடித்துள்ளார். பிரதியுஷா, சித்தார்த் ரெட்டி என்பவரைக் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்குச் சித்தார்த்தின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் காதலுக்கு எழுந்த எதிர்ப்பால், 2002-ஆம் ஆண்டு பிரதியுஷாவும், சித்தார்த் ரெட்டியும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துத் தற்கொலைக்கு முயன்றனர். இதில், சித்தார்த் உயிர் தப்பிய நிலையில், பிரதியுஷா உயிரிழந்தார். இச்சம்பவத்தில் சித்தார்த்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த பிரதியுஷாவின் தாயார், 2012-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார். தனது மகளின் இறப்பு திட்டமிடப்பட்ட கொலை என அவர் வாதிட்டார். 23 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தற்போது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர். இதன் மூலம், பிரதியுஷாவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் நீதிமன்றத் தீர்ப்பால் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
