காதலுக்குக் கண் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், பார்வை மற்றும் காது கேட்கும் திறன் இல்லாத ஒரு கணவருக்கும், எந்தக் குறைபாடும் இல்லாத அவரது மனைவிக்குமிடையேயான உண்மைக் காதலை ஜீ தமிழ் தொலைக்காட்சியின் “தமிழா தமிழா” நிகழ்ச்சி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இன்றைய அவசர உலகில் பல தம்பதிகளுக்குள் பொறுமை இல்லாததால் சிறுசிறு பிரச்னைகள்கூட பிரிவில் முடிவடையும் நிலையில், இந்தத் தம்பதியின் காதல் பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது.
கல்லூரிப் படிப்பின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளைப் புரிந்துகொள்வது குறித்த பயிற்சியின்போது மாணவியாக இருந்த பெண்மணிக்கு, இந்தக் கணவர் (அப்போது நண்பர்) பாடம் நடத்தியுள்ளார். பயிற்சி முடிந்த பின் இருவரும் மின்னஞ்சலில் நட்பைத் தொடர்ந்தனர். காது கேட்காததால், போனில் பேச முடியாத நிலையில், ஒரு நாள் காத்திருந்து பிரெய்லி கருவி மூலம் கணவர் பதிலைப் படித்ததாக மனைவி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
View this post on Instagram
“>
முதலில் அந்தக் கணவர்தான் தன் காதலை வெளிப்படுத்த, குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். வாடகைக்கு வீடு கிடைப்பதில்கூட சவால்களைச் சந்தித்தபோதும், இன்று அந்தக் கணவர் கல்லூரிப் பேராசிரியராக இருக்கிறார்.அவரிடம் படித்த மாணவர்கள் யாரும் தோல்வியடைவதில்லை என்ற பெருமையுடன், எந்த இடத்திலும் கணவரின் நிலையை பரிதாபமாகப் பார்க்காமல் தான்.
அவருக்கு வாழ்வு கொடுத்ததாகப் பெருமைப்படாமல், இருவருக்கும் இடையேயான நிஜமான அன்பையும் காதலையும் மட்டுமே அந்த மனைவி வெளிப்படுத்தினார். பணம், வசதி, படிப்பு என்று பல காரணங்களுக்காகக் காதலைத் தூக்கி எறிபவர்களுக்கு மத்தியில், பல சவால்களைத் தாண்டி ஆனந்தமாக வாழும் இவர்கள்தான் உண்மையான காதலர்கள் என்று பலரும் ஆச்சரியத்துடன் வாழ்த்தி வருகின்றனர்
