கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடையைச் சேர்ந்த சக்திவேல்குமரன் என்பவரது 9-ம் வகுப்பு மகள், பள்ளி ஆசிரியைகள் தொடர்ந்து கொடுத்த மன உளைச்சல் காரணமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரெனத் தீக்காயங்களுடன் அலறிய நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, வீட்டில் வெந்நீர் வைத்தபோது காயம் ஏற்பட்டதாக முதலில் பெற்றோர் தெரிவித்த நிலையில், மாணவி மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.

இதற்கிடையே, மகளின் மரணத்திற்குப் பள்ளியில் பணிபுரியும் மூன்று ஆசிரியைகள்தான் காரணம் என அவரது பெற்றோர் தற்போது பகீர் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். அறிவியல் ஆசிரியை சக மாணவர்கள் முன் அவமானப்படுத்தியது, தமிழ் ஆசிரியை விடுமுறை கேட்டதற்காகக் கன்னத்தில் அறைந்தது, ஆங்கில ஆசிரியை உருவம் மற்றும் தலைமுடி குறித்துக் கேலி செய்தது போன்ற காரணங்களால் மனமுடைந்தே தனது மகள் தீக்குளித்ததாக சக்திவேல்குமரன் புகார் தெரிவித்துள்ளார்.

“உடலில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டால், அம்மா தன்னைக் கண்டிக்க மாட்டார் என்று நினைத்தே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தேன்.  காயம் சிறிய அளவே இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த அளவுக்கு ஏற்படும் என்று நினைக்கவில்லை என்றார். மாணவியின் இந்த வாக்குமூலம் அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது.