தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பரிசுத் தொகுப்புடன் ₹5,000 ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்றதற்கு, அங்குள்ள பெண்களுக்குத் தலா ₹10,000 வழங்கும் திட்டம் சாதகமாக அமைந்தது போலவே, தமிழகத்திலும் பெண்களைக் கவரும் விதமாக இந்தத் தொகையை வழங்க அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த மெகா பரிசுத் திட்டத்திற்காக சுமார் ₹12,000 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்குமாறு நிதித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தக் தகவல் குறித்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.