திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்புன்ராஜ். இவரது மனைவி ஜீவா. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜீவாவுக்கும் பிரேம்குமார் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அப்புன்ராஜுக்குத் தெரிய வந்ததையடுத்து, அவர் பிரேம்குமாரைக் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், கடந்த நவம்பர் 13-ஆம் தேதி நள்ளிரவில், அப்புன்ராஜின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அங்கு கையில் வைத்திருந்த கத்தியால் அப்புன்ராஜை சரமாரியாகத் தாக்கி வெட்டியுள்ளார். பிரேம்குமார் நடத்திய இந்தத் தாக்குதலில், அப்புன்ராஜுக்கு உடலில் 5 இடங்களில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த அப்புன்ராஜ் உடனடியாக மீட்கப்பட்டு, முதலில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்புன் ராஜைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்ற பிரேம்குமாரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.