சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில், அலங்காரமான ‘சூட்-பூட்’ அணிந்து வந்து திருமண விழாவில் திருடிச் சென்ற இரண்டு திருடர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். குதியாரி பகுதியில் உள்ள ஓஷோ மேரேஜ் பேலஸில் நடந்த திருமண விழாவில், ஒரு லட்ச ரூபாய் பணம், ஒரு வெள்ளிச் சிலை மற்றும் ஒரு மொபைல் போன் அடங்கிய பர்ஸை இவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்டவர்கள் நென்வின் மாணிக்புரி என்ற லல்லா மற்றும் கிஷன் சாஹு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருடுவதற்கு முன்னதாக, அவர்கள் திருமண மண்டபத்தில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தபோது நோட்டம் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர், இரவில் விருந்தினர்கள் போலச் ‘சூட்-பூட்’ அணிந்து வந்து, முதலில் விருந்துச் சாப்பாட்டைச் சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு, சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும் ஒரு பர்ஸை திருடிச் சென்றுள்ளனர்.

இந்தத் திருட்டுக் குறித்துப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீஸார் சம்பவ இடத்தில் எந்தவிதத் தடயமும் கிடைக்காததால், திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த துப்பு அடிப்படையில் இரண்டு திருடர்களையும் அடையாளம் கண்டு, தேடுதல் வேட்டையைத் தொடங்கி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் ஏற்கனவே திருட்டு வழக்குகளில் சிறை சென்றவன் என்றும், திருடப்பட்ட பணத்தில் பெரும்பகுதியை அவர்கள் செலவு செய்துவிட்டனர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.