டெல்லியின் செங்கோட்டை அருகே திங்கட்கிழமை மாலை ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) காரில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்; 20 -க்கு மேற்பட்டோர்  காயமடைந்தனர். இந்த வெடிப்புச் சம்பவம், பழைய வாகனங்களை உரிமை மாற்றம் செய்யாமல் விற்பதன் அபாயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

HR26CE7674 என்ற பதிவு எண் கொண்ட இந்தக் கார் 2013-ல் தயாரிக்கப்பட்டது. 2014-ல் குர்கானில் வசித்த சல்மான் என்பவருக்கு விற்கப்பட்ட இந்தக் கார், அதன் பிறகு டெல்லியின் ஓக்லா, அம்பாலா, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மற்றும் ஃபரிதாபாத் எனப் பல மாநிலங்களில் பல கைகளுக்கு மாறியுள்ளது. இறுதியாக இந்தக் கார்,  தாக்குதல் நடத்திய டாக்டர் உமர் முகமது என்பவரிடம் சென்றுள்ளது.

ஒவ்வொரு முறை விற்கப்பட்டபோதும், வாகனத்தின் உரிமை சட்டப்படி புதிய உரிமையாளருக்கு மாற்றப்படவில்லை. இதனால், இரண்டாவது உரிமையாளரான சல்மான் இந்தச் சம்பவத்தில் சட்ட சிக்கலுக்கு ஆளாக நேரிட்டது.

எனவே, பயன்படுத்திய காரை விற்கும்போது சட்டரீதியான மூன்றாம் தரப்புச் சிக்கல்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, உரிமை மாற்றம் மிக அவசியம். சமீபத்தில் இந்தக் காரை விற்ற ‘சோனு’ என்ற டீலர், செலவைக் குறைப்பதற்காக உரிமையாளர் மாற்றத்தைச் செய்யாமல் விட்டது, முந்தைய உரிமையாளர்களைச் சந்தேக வளையத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

வாகனத்தை விற்பனை செய்யும் முன், ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக பதிவுச் சான்றிதழ் (RC புத்தகம்), காப்பீட்டுச் சான்றிதழ், மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ், வரி ரசீதுகள் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.

மேலும், விற்பனைக்கு முன் நிலுவையில் உள்ள கடன்கள், அபராதங்கள் அல்லது சேவைக் கட்டணங்களைச் செலுத்தி விடுவது உரிமை மாற்றத்தைச் விரைவுபடுத்தும். இறுதியாக, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் படிவங்கள் 28, 29 மற்றும் 30 ஆகியவற்றைச் சமர்ப்பித்து உரிமையை அதிகாரப்பூர்வமாக மாற்றுவதும், அதற்கான ஒப்புகைச் சான்றுகளைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியம்.