திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மனைவி அமுதவள்ளி (55). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சுடலைமுத்து உயிரிழந்தார்.

இந்தத் துயரம் நீங்குவதற்கு முன்பே, கடந்த ஆண்டு அமுதவள்ளியின் மகளும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், தொடர் துயரங்களால் அமுதவள்ளி மனமுடைந்த நிலையில் மிகவும் கவலையாக இருந்துள்ளார்.

மகளின் இழப்பைத் தாங்க முடியாமல் கடும் துயரத்தில் இருந்த அமுதவள்ளி, நேற்று (நவம்பர் 9) அதிகாலையில் தனது வீட்டில் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.

இதில் அவரது உடல் கருகி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார், அமுதவள்ளியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.