விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்ற சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் எதிர்பாராத சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. அப்போது, உயிரிழந்த சார்லஸின் குடும்பத்தினர் தங்களுக்கென சொந்தமாக வீடு இல்லை என்ற வேதனையைத் தெரிவித்தனர்.
இத்தகவல் த.வெ.க. தலைவர் விஜய்க்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சார்லஸ் குடும்பத்திற்கு உடனடியாக வீடு கட்டித் தர உத்தரவிட்டார். அதன்படி, வீட்டின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தலைவர் விஜயின் உத்தரவின் பேரில், விபத்தில் பலியான சார்லஸ் குடும்பத்திற்கு வீடு கட்டித் தரும் முதற்கட்டப் பணியாக, நிர்வாகிகள் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது.
