இன்றைய நவீன உலகில் அதிக சம்பளம், பெரிய பதவிகள் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்குப் பின்னால் மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 34 வயது இளம்பெண் ஒருவர் எடுத்துள்ள விபரீத முடிவு உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தோராயமாக ஆண்டுக்கு 66 லட்சம் ரூபாய் சம்பளம் மற்றும் சொகுசு வசதிகள் அளித்த மிகப்பெரிய தலைவர் பதவியை உதறித் தள்ளிய அவர், சுமார் 40 சதவீத ஊதியக் குறைவுடன் ஒரு சாதாரண வரவேற்பாளராக  பணியில் சேர்ந்துள்ளார். மன அழுத்தமும் தீவிர பணிச்சுமையும் ஒரு மனிதனை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதற்கு இவரது கதை சாட்சியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஒரு நகரைச் சேர்ந்த மேக்லெலாண்ட் என்பவர், சில்லறை விற்பனை நிறுவனத்தில்  சாதாரண விற்பனை உதவியாளராகத் தன் பணியைத் தொடங்கி, கடின உழைப்பால் உயர்ந்து ஒரு முன்னணி நிறுவனத்தின் ஸ்டோர் மேலாளராக உயர்ந்தார். பார்ப்பதற்கு இது மிகப்பெரிய வெற்றியாகத் தெரிந்தாலும், மறுபுறம் கடுமையான வேலை நேரம், நீண்ட தூரப் பயணம் மற்றும் உயர் அதிகாரிகளின் இலக்கு அழுத்தம் ஆகியவை அவரது நிம்மதியைக் கெடுத்தன. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் தனக்கென வாழ எந்த சக்தியும் இல்லாத அளவுக்கு அவர் மனதளவில் சோர்வடைந்தார். இதனால் கடுமையான மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு ஆளான அவர், வேறு வழியின்றி அந்த வேலையை விட்டு விலகினார்.

இதனைத் தொடர்ந்து ஒரு ஆடம்பர பிராண்ட் நிறுவனம் அவருக்கு ஆண்டுக்கு சுமார் 66 லட்சம் ரூபாய் சம்பளம், வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் பல சலுகைகளுடன் கூடிய உயர் பதவியை வழங்கியது. எதற்கும் ஒருமுறை முயன்று பார்ப்போம் என்று அந்த வேலையில் சேர்ந்தாலும், பணமும் பதவியும் இருந்ததே தவிர அவரால் அதில் மனப்பூர்வமாக ஈடுபட முடியவில்லை. நாளுக்கு நாள் செயற்கையான நடிப்பும், வெறுப்பும் அதிகரிக்கவே, வாழ்க்கைக்குப் பணம் மட்டுமே முக்கியமல்ல நிம்மதிதான் முக்கியம் என்ற முடிவுக்கு வந்தார். யாருக்கும் இல்லாத துணிச்சலாக அந்தப் பெரிய வேலையையும் ராஜினாமா செய்தார்.

சில காலம் ஓய்வுக்குப் பிறகு, மீண்டும் பெரிய பதவிகளைத் தேடாமல் முற்றிலும் குறைவான அழுத்தமுள்ள நிர்வாகப் பணியைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நிறுவனத்தில் வரவேற்பாளராகவும் அலுவலக மேலாளராகவும் பணியில் இணைந்தார். முன்பு வாங்கிய சம்பளத்தை விட 40 சதவீதம் குறைவான ஊதியம் கிடைத்தாலும், தற்போது தனக்குக் கிடைக்கும் மன அமைதியும், ஓய்வு நேரமும் மிகவும் திருப்தி அளிப்பதாக அவர் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார். பணத்தை விட மனிதனின் மனநலமே பிரதானம் என்பதை இந்தப் பெண் தனது தைரியமான முடிவின் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளார்.