தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்தும் 1948ஆம் ஆண்டு தொழிற்சாலைச் சட்டத்தில் இருந்த சில விதிகளைத் தளர்த்தி, புதுச்சேரி அரசு கடந்த மாதம் 6ஆம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டது. தொழிலாளர் துறை செயலர் ஸ்மிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இந்த அறிவிப்பின் மூலம், பெண் ஊழியர்களை இரவு 7 மணி வரை மட்டுமே பணியமர்த்த முடியும் என்றிருந்த முந்தைய கட்டுப்பாட்டை நீக்கி, இனி இரவு 10 மணி வரை பணியமர்த்த அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, தொழிற்சாலைகளில் இரவு நேரப் பணிகளின்போது பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதுடன், பாலின சமத்துவத்தை உறுதி செய்தல், சம வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரப் பங்களிப்பை செயல்படுத்துதல் போன்ற உன்னத நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று புதுச்சேரி அரசு தெளிவுபடுத்தியுள்ளது.