வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான ஜஹானாரா ஆலம், அணியின் முன்னாள் தேர்வாளரான மன்ஜூருல் இஸ்லாம் மீது பாலியல் தொல்லை மற்றும் அநாகரிகமாக நடந்துகொண்டதாக பகிரங்கமாகப் புகார் தெரிவித்துள்ளார். 2022 பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பையின்போது, அணியின் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்த மன்ஜூருல், தான் அவரது முறையற்ற வேண்டுகோளை ஏற்க மறுத்ததால், தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடக்கியதாக ஜஹானாரா ஆலம் குற்றம்சாட்டியுள்ளார்.
பயிற்சியின்போது, மன்ஜூருல் வீராங்கனைகளிடம் அளவுக்கு மீறி நெருங்குவது, கையைப் பிடிப்பது, தோளில் கை போடுவது மற்றும் மாதவிடாய் சுழற்சி குறித்து அநாகரிகமாகக் கேள்விகள் கேட்பது போன்றவற்றைச் செய்ததாக ஜஹானாரா வேதனையுடன் விவரித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (BCB) மூத்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மன்ஜூருல் இஸ்லாம் ‘ஆதாரமற்றவை’ என முழுமையாக மறுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்படும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.
