உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில், மைத்துனியின் திருமணத்துக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை, அண்ணனின் மனைவி திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் மொஹல்லா நை பஸ்தி பகுதியைச் சேர்ந்த அக்ரம் என்றழைக்கப்படும் கலுவா, தனது சகோதரியின் நவம்பர் 11ஆம் தேதி நடக்கவிருந்த திருமணத்துக்காக நெக்லஸ், வளையல்கள், சங்கிலி, மோதிரங்கள் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை வீட்டில் வைத்திருந்தார்.
அக்டோபர் 23ஆம் தேதி இரவு இந்த நகைகள் காணாமல் போனதைத் தொடர்ந்து, மறுநாள் ஹத்ராஸ் கேட் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
போலீஸ் சூப்பிரண்டெண்ட் சிரஞ்சீவ் நாத் சின்ஹா உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அக்ரமின் மனைவிக்கும் அவரது சகோதரிக்கும் இடையே உறவு சுமூகமாக இல்லை என்பதும், நகைகள் சகோதரிக்கு கொடுக்கப்படுவதை விரும்பாத அவர், அவற்றைத் திருடி தனது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பியது தெரியவந்தது.
அக்ரம் தன் மனைவியை விசாரித்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மீட்கப்பட்ட நகைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று எஸ்பி சின்ஹா தெரிவித்தார்.
