சென்னை, மணலி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 23 வயது இளம்பெண் ஒருவர், தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, குளியலறை கதவின் ஓட்டை வழியாக வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குள் ஓடிய அந்தப் பெண், இதுகுறித்து மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மோனிஷ் கௌதம் (வயது 27) என்ற வாலிபரை உடனடியாகக் கைது செய்தனர். மணலி இளம்பெண்ணை வீடியோ எடுத்தது தொடர்பான இந்த வழக்கு, திருவொற்றியூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி கார்த்திக் அதிரடியாக அறிவித்தார்.
இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட மோனிஷ் கௌதமிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கூடுதலாக ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
