சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்.டி.சி.) இணை மேலாண் இயக்குநர் குணசேகரன், பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு வாங்குவது தொடர்பாகப் பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியாகப் புகார்கள் வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகள் பேருந்தில் ஏறும்போதே சரியான சில்லரையுடன் பயணிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யக்கூடாது எனவும், பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களைப் பெற்று உரிய மீதித் தொகையை கனிவுடன் வழங்க வேண்டும் எனவும் கண்டக்டர்களுக்கு கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கண்டக்டர்களுக்குப் பணிமனையில் வழங்கப்படும் முன் பணத்தைப் பயணிகளுக்குச் சில்லறை வழங்க முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், சில்லறை தொடர்பான வாக்குவாதங்களைத் தவிர்த்து பயணிகளிடம் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இணை மேலாண் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.